கர்நாடக அரசியலில் மீண்டும் புயலை கிளப்பும் திப்பு சுல்தான் விவகாரம்

திப்பு சுல்தான் வரலாறு பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கம் என்ற அறிவிப்பை தொடர்ந்து கர்நாடகத்தில் மீண்டும் ஒரு சர்ச்சைக்கு வழிவகுக்கப்பட்டு உள்ளது.

0
158
-Ads-

2015 முதல் கர்நாடகாவில் ‘ஹஸ்ரத் திப்பு சுல்தான் ஜெயந்தி’ அதிகாரப்பூர்வமாக கொண்டாடப்பட்டாலும், பரவலான ஆர்ப்பாட்டங்களும், காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் தலைமையிலான சூடான விவாதங்களும் கர்நாடக அரசியலில் ஒரு பொதுவான விவகாரமாக மாறி இருந்தது.

திப்பு சுல்தான் 1799 இல் அவர் இறந்து இரண்டு நூற்றாண்டுகளும் இரண்டு தசாப்தங்களும் கடந்துவிட்டன, ஆனால் மைசூர் மன்னரின் மரபு குறித்தும்   திப்பு சுல்தான் நல்லவரா? கெட்டவாரா? என்பது குறித்தும்  கடுமையான  விவாதங்கள் நடந்து வருகின்றன.
சமீபத்தில்  மடிகேரியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ அப்பாச்சு ரஞ்சன் முதன்மை மற்றும் இடைநிலைக் கல்வி அமைச்சர் சுரேஷ்குமாருக்கு  ஒரு கடிதம் எழுதியிருந்தார் அதில் திப்பு சுல்தான் குறித்த அனைத்து குறிப்புகளையும் வரலாற்று புத்தகங்களிலிருந்து நீக்குமாறு கேட்டுக்கொண்டார்.
ரஞ்சன் தனது கடிதத்தில், திப்பு சுல்தான் ஒரு சுதந்திர போராட்ட வீரராக சித்தரிக்கப்படுகிறார்.  பாடப்புத்தகங்களில் உள்ள  வரலாறு பொய்யானது. திப்பு பல இந்துக்களையும் கிறிஸ்தவர்களையும்  படுகொலை செய்ததாக அவர் கூறினார். அவரது ஆட்சியில்   பயன்படுத்தப்பட்ட  மொழி  பாரசீக மொழியாக இருந்ததால் திப்பு கன்னடத்திற்கு எதிரானவர்.
நம் வருங்கால சந்ததியினரிடம் உண்மையை சொல்ல வேண்டும். எனவே, தற்போதைய பாடத்திட்டங்கள் மற்றும் நூல்கள் குறித்து கல்வி நிபுணர்களின் கருத்துக்களை எடுத்துக் கொண்டு, ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளின் பாடப்புத்தகங்களில் தேசபக்தி மற்றும் நாடு மீதான அன்பு போன்ற கருத்துக்களைக் கொண்டு வாருங்கள் என் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு 2015 இல்  திப்பு பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு ஒப்புதல்  வழங்கியபோது திப்பு சுல்தான்  தொடர்பான சர்ச்சைகள் மீண்டும்  புத்துயிர் பெற்றன.
திப்புவை கொண்டாடுபவர்கள் ‘அவரின் மதச்சார்பற்ற’ கருத்துக்களையும் பங்களிப்பையும் ஒரு ‘சுதந்திரப் போராளி’ என்று அதிகம் பேசுகின்றனர்.  அவரது  எதிர்ப்பாளர்கள் பெரும்பாலும் மடிகேரி – மலபார் பிராந்தியத்தில் அவர் கட்டாயப்படுத்தப்பட்ட மத மாற்றங்கள் மற்றும் சுரண்டல்களை சுட்டிக்காட்டுகின்றனர். 
2015 ஆம் ஆண்டில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாரப்பூர்வமாக திப்பு ஜெயந்தி  கொண்டாட்டங்களை காங்கிரஸ் அரசு நடத்தியபோது  மாநிலம் முழுவதும் வன்முறை போராட்டங்கள் நடத்தப்பட்டன. கர்நாடகா முழுவதும் பாஜக, விஸ்வ இந்து பரிஷத் ஆர்எஸ்எஸ், மற்றும் பஜ்ரங் தளம் ஆகியவற்றின் போராட்டங்களின் விளைவாக இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். இந்த மோதல்களில் குடகுவில் வி.எச்.பி தலைவர் உட்பட குறைந்தது 2 பேர் கொல்லப்பட்டனர்.

2016 ஆம் ஆண்டில், மாநில அரசின் கன்னட மற்றும் கலாச்சாரத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பிரமாண்ட கொண்டாட்டம் விதான சவுதாவில் சபாநாயகர், முதலமைச்சர் மற்றும் அப்போதைய காங்கிரஸ் அரசின்  பிற உயர் தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா, தலைவர்களான ஆர்.அஷோக், ஷோபா , எஸ்.சுரேஷ் குமார், மற்றும் எழுத்தாளர் எம்.சிதானந்த மூர்த்தி ஆகியோர்  பெங்களூரில்  பெரிய போரட்டம் நடத்தினர்.
அடுத்த 2017 ஆம் ஆண்டு  திப்பு ஜெயந்திக்கு சில நாட்களுக்கு முன்பு, கர்நாடக சட்டசபையில் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் உரையாற்றினார். அப்போது  அவர் திப்பு சுல்தானை பாராட்டி பேசினார். 
“திப்பு சுல்தான் ஆங்கிலேயரை  எதிர்த்துப் போராடி  வீர மரணம் அடைந்தார்.  ராக்கெட்டுகளை யுத்தத்தில் மேம்படுத்துவதற்கும் பயன்படுத்துவதற்கும் அவர் ஒரு முன்னோடியாக இருந்தார், ”என்று கூறினார்.
பாரதீய ஜனதா ஜனாதிபதிக்காக உரை எழுதியது  அப்போதைய முதல்வர் சித்தராமையாவின் அலுவலகம் என்று கூறியது, ஆனால் அது ஜனாதிபதி  ராஷ்டிரபதி பவனின் அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டது என்பது தெளிவுபடுத்தப்பட்டது.
இதற்கிடையில், அப்போதைய மத்திய திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே ஒரு டுவீட்டில் திப்புவை ஒரு “மிருகத்தனமான கொலையாளி” என்று குறிப்பிட்டார். இது கொல்கத்தாவில் உள்ள திப்பு சுல்தானின் சந்ததியினர்  மத்திய அமைச்சருக்கு எதிரான சட்ட நடவடிக்கை குறித்து சிந்திக்க வழிவகுத்தது.
நவம்பர் 10 ம் தேதி நிகழ்ச்சிகளுக்கான அழைப்பாளர்களின் பட்டியலில் தனது பெயரை சேர்க்க வேண்டாம் என்று கேட்டு கர்நாடக முதல்வர் அலுவலகம் மற்றும் உத்தர கன்னட துணை ஆணையருக்கு ஹெக்டே கடிதம் எழுதினார்.

2018ஆம் ஆண்டு  திப்பு ஜெயந்தி கொண்டாட்டங்களுக்கு எதிராக எரிச்சலூட்டும் பேச்சுக்காக கன்னட நாளிதழின்  ஒரு பத்திரிகையாளர் துமகுருவில் கைது செய்யப்பட்டதை அடுத்து, 2018 ல் கர்நாடகாவில் விவாதங்களும் போராட்டங்களும் வெடித்தன.
இருப்பினும், சித்தராமையா காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசின் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் பி இசட் ஜமீர் அகமது கானுடன்  பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் திப்பு ஜெயந்தியை கொண்டாடினார்.
நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் வெற்றி பெற்று எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு  ஆட்சி அமைத்தது. ஆட்சிக்கு வந்தவுடன்  கர்நாடகாவில் திப்பு ஜெயந்தி கொண்டாட்டத்தை முடிவுக்கு கொண்டுவர 2019 ஜூலை மாதம் முடிவு எடுத்தது.
திப்பு ஜெயந்தி கொண்டாட்டங்களை ரத்து செய்யுமாறு பாஜக எம்எல்ஏ கே.ஜி. போபையா கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இது குறித்து  சித்தராமையா, கூறும் போது, “திப்பு ஜெயந்தியை நிறுத்துவதற்கான முடிவு ஒரு பெரிய தவறாகும் . திப்பு ஒரு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் அங்கீகரிக்கப்படவில்லை, ஆனால் ஒரு ஆட்சியாளராக அவர் அளித்த பங்களிப்பு மிகப்பெரியது. அவர் ஆங்கிலேயருக்கு எதிராக தைரியமாகப் போராடி பல மேம்பாட்டுப் பணிகளைச் செய்தார். 
இந்த நிலையில் பெங்களூரு பிரஸ் கிளப்பில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த  கர்நாடக முதல்வர் எடியூரப்பா  திப்பு சுல்தானின் வரலாறு பாடப்புத்தகங்களிலிருந்து நீக்கப்படும் . அவர் சுதந்திரப் போரட்ட வீரர் அல்ல என்பதால் இதுபோன்ற தலைப்புகள் புத்தகங்களில் சேர்க்கப்படக்கூடாது என கூறினார். 
வருகிற, நவம்பர் 10-ந்தேதி  திப்பு ஜெயந்தி கொண்டாட்டங்களைச் சுற்றி திப்பு சார்பு மற்றும் திப்பு எதிர்ப்பு குழுக்கள்  போராட்டங்களில் குதிக்க இது வாய்ப்பாகி உள்ளது.
யார் இந்த திப்பு சுல்தான்
மைசூரின் புலி என அழைக்கப்படும் திப்பு சுல்தான் 1750 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள தேவனஹள்ளி என்ற இடத்தில் ஹைதர் அலிக்கும், பாக்ர்-உன்-நிசாவுக்கும் மகனாகப் பிறந்தார். 

தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயகர்களான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற  போராட்ட வீரர்களுக்கு  அன்று மிகப்பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திப்பு.
1782 டிசம்பரில், தந்தை ஹைதர் இறந்த பின் அரசுரிமையைப் பெறும்போது திப்புவின் வயது 32. மேற்குக் கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களைத் துடைத்தெறிந்து விட வேண்டும் என்ற வேகத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு. 
இன்றைய ராக்கெட் தொழில்நுட்பத்துக்கான முன்னோடி என்று உலகின் முன்னணி விண்வெளி ஆய்வு நிறுவனம் புகழ்கிறது. 49 வயது வரை வாழ்ந்த திப்புவின் நிர்வாகத்தை, இன்று வரை உலகம் கொண்டாடுகிறது.
வரலாற்றில் ஓர் அரசர், அளவுக்கு மீறிப் புகழப்படுபவராகவும் அல்லது கொடுங்கோலராகவும் காட்டப்படுவார்கள். திப்புவின் வரலாறோ, இரண்டையும் கொண்டுள்ளது. ஒரு சாரார் திப்புவின் செயல்பாடுகளை விமர்சித்தாலும், தொடர்ந்து திப்பு சுல்தான் எப்படிப்பட்டவர் என்ற ஆதாரம் வரலாறு முழுக்கப் படர்ந்து கிடக்கிறது.
வலதுசாரி இயக்கங்களால் திப்புவின் மீது தொடர்ந்து சுமத்தப்படும் அவதூறு, அவர் மதவாதி, இந்துக்களை மதமாற்றம் செய்தவர். முஸ்லிம்களுக்கு மட்டுமே பொறுப்புகளை அளித்தவர், இந்துக் கோயில்களை இடித்தவர் என, அவர் இஸ்லாமியர் என்ற ஒரே காரணத்துக்காக எதிர்க்கப்படுகிறார். ஆனால், திப்பு சுல்தான் எப்படிப்பட்டவர் என்பதற்கு, ஆதாரங்கள் பல உள்ளன.

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here