தந்தை கைவிட்டதை மகன் எடுத்தார்: 12 ஆண்டுகளுக்குப் பின் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் சட்டம்: ஆந்திர அரசு உத்தரவு

0
178
-Ads-

அமராவதி

தொலைக்காட்சி சேனல்கள், நாளேடுகள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றில் அரசு குறித்து பொய்யான, தவறான, அவதூறு பரப்பும் செய்திகளை வெளியிட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும் சட்டத்தை ஆந்திர மாநில அரசு மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்தபோது இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அப்போது ஊடகங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படுவது குறித்து கடும் விமர்சனங்களும், போராட்டங்களும் நடந்ததையடுத்து இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டாலும் கிடப்பில் போடப்பட்டது.

தந்தை கைவிட்ட சட்டத்தை அவரின் மகனும் ஆந்திர முதல்வரான ஒய்எஸ்ஆர் ஜெகன்மோகன் ரெட்டி 12 ஆண்டுகளுக்குப் பின் சில மாற்றங்களுடன் மீண்டும் அமல்படுத்தியுள்ளார். அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி ராஜகசேகர ரெட்டி இந்தச் சட்டத்தைப் பிறப்பித்து G.O. (No.938)அரசாணையும் பிறப்பித்தார்.

கடந்த 2007-ம் ஆண்டு ராஜசேகர ரெட்டி பிறப்பித்த உத்தரவில் அச்சு ஊடகங்கள், மின்னணு ஊடகங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு இருந்தது. ஆனால், ஜெகன்மோகன் ரெட்டி பிறப்பித்த உத்தரவில், சமூக ஊடகங்களில் அரசை விமர்சித்தால், அரசு குறித்து பொய்யான தகவல்களை, செய்திகளை வெளியிட்டால் கூட நடவடிக்கை எடுக்க வழி செய்யப்பட்டுள்ளது.

முந்தைய ராஜசேகர ரெட்டி அரசின்போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் பொய்யான, தவறான செய்திகளை அரசுக்கு எதிராக வெளியிடும் நாளேடுகளின் பதிப்பாளர், ஆசிரியர் ஆகியோருக்கு எதிராகத் தலைமை தகவல் ஆணையர்கள்தான் வழக்குத் தொடர முடியும் என்ற நிலை இருந்தது.

அதே மாற்றி, புதிய சட்டத்தில் சம்பந்தப்பட்ட துறையின் செயலாளர்கூட சட்டரீதியான நடவடிக்கையை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சில அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சி சேனல்கள், சமூக ஊடகங்கள் வேண்டுமென்றே அரசின் முயற்சிகளையும், செயல்களையும் தவறான நோக்கில் சித்தரித்து, அரசின் தோற்றத்தைச் சிதைக்கவும், அவப்பெயர் ஏற்படுத்தவும் முயல்கின்றன என ஆந்திர அரசுக்குத் தகவல் வந்தது. இதையடுத்து, இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தகவல் ஆணையர் டி.விஜயகுமார் ரெட்டி தனது அரசாணையில் தெரிவித்துள்ளார்.

இந்தப் புதிய அரசாணையில் சம்பந்தப்பட்ட துறையின் செயலாளர்கள் கூட, நாளேடுகள், சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகள் மீது புகார்கள் அளிக்கவும், வழக்குத் தொடரவும் முடியும்.

தேவைப்பட்டால் அரசு வழக்கறிஞர் மூலம் அவதூறு செய்தி வெளியிட்ட நாளேடு, தொலைக்காட்சி, சமூக ஊடகங்களுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பவும் முடியும்.

ஆந்திர அரசின் நடவடிக்கை குறித்து தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் வெங்கட ராமையா கூறுகையில், “அரசின் திட்டம், செயல்கள், பணிகள் குறித்து தவறாக, பொய்யாக வெளியாகும் செய்திகள் அரசின் அமைப்புக்கும், அதிகாரிகளுக்கும், துறைக்கும் அவப்பெயரை ஏற்படுத்துகிறது. அரசின் தோற்றத்தையும் கெடுக்கிறது. இதைச் சரிசெய்யவே இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here