மறக்கவே முடியாத ஜெஸ்ஸிகா.. ஆனால் அமெரிக்கா சுதாரிச்சுச்சு பாருங்க.. நாம நிறைய கத்துக்கணும்!

0
156
-Ads-

டெல்லி: ஜெஸ்ஸிகா மெக்லியூர்.. அமெரிக்கர்களால் மறக்க முடியாத பெயர்.. இன்று எப்படி நம்முடைய உள்ளத்திலும், உணர்வுகளிலும் சுஜித் நிறைந்திருக்கிறானோ அதுபோலத்தான் 1987ம் ஆண்டு அமெரிக்கா முழுவதையும் ஆட் கொண்டிருந்தது ஜெஸ்ஸிகாவின் பெயர். ஜெஸ்ஸிகா மீண்டு வந்தார்.. ஆனால் சுஜித் நம்மை விட்டு பிரிந்து போய் விட்டான். இதுதான் வித்தியாசம்.

ஜெஸ்ஸிகாவின் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது. பின்னணி என்று சொல்லக் கூடாது.. முன்னணியில் என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், இன்று அமெரிக்காவில் ஆழ் துளைக் கிணறுகளில் யாருமே விழுவதில்லை.. உயிரிழப்புகள் ஏற்படுவதில்லை.. காரணம், ஜெஸ்ஸிகாதான்.

ஜெஸ்ஸிகாவின் கதையை ஒட்டுமொத்த இந்தியர்களும் படிக்க வேண்டும். காரணம், அப்போதுதான் மேலும் ஒரு சுஜித்தை இழக்காமல் காக்க முடியும். ஆம், ஜெஸ்ஸிகாவும் ஆழ் துளைக் கிணற்றில் விழுந்து மீட்கப்பட்டவர்தான். இன்று 33 வயதாகிறது ஜெஸ்ஸிகாவுக்கு.

அது டெக்சாஸ் மாகாணத்தின் மிட்லேன்ட் நகரம். அப்போது ஜெஸ்ஸிகாவுக்கு வயது ஒன்றரை. தனது அத்தை வீட்டுக்கு வந்திருந்தாள் ஜெஸ்ஸிகா. சுட்டிக் குழந்தையான ஜெஸ்ஸிகா வீட்டுக்குள்ளும், வெளியிலும் ஓடி விளையாடியபடி இருந்தாள். அவளை கட்டுப்படுத்தவே முடியாது. அப்படி ஒரு சுட்டித்தனம். இதனால் கூடவே உட்கார்ந்து மகள் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் தாயார் ரீபா மெக்லியூர்.

அப்போது வீட்டுக்குள் ஏதோ ஒரு வேலையாக ரீபா உள்ளே சென்றுள்ளார். இந்த நேரம் பார்த்து ஜெஸ்ஸிகா வீட்டுக்கு பின்பக்கம் ஓடினாள். அங்கு விளையாடிக் கொண்டிருந்தவள் திடீரென மாயமானாள்.. ஆம்.. அங்கு மூடப்படாமல் விட்டிருந்த பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்து விட்டாள் ஜெஸ்ஸிகா.

வீட்டுக்குள் வேலையாகப் போன தாயார் ரீபா திரும்பி வந்து பார்த்தபோது மகளைக் காணவில்லை. பதறிப் போன அவர் தேடியபோதுதான் போர்வெல்லில் விழுந்து மகள் தவிப்பது தெரிய வந்தது. துடித்துப் போனார். தகவல்கள் பறந்தன. தீயணைப்புப் படையினர், மீட்புப் படையினர் விரைந்து வந்தனர். அது ஒரு 22 அடி ஆழம் கொண்ட போர்வெல் கிணறு.

மின்னல் வேகத்தில் மீட்புப் பணிகள் தொடங்கின. மீட்புப் பணியாளர்கள் குழந்தையை எளிதாக மீட்டு விடலாம் என்றுதான் முதலில் நினைத்தனர். ஆனால் அது நினைத்ததை விட கடினமானதாக இருந்தது. நம்ம ஊரில் செய்வது போலவே பக்கவாட்டில் ஒரு பெரிய பள்ளம் தோண்டினார்கள். வழக்கம் போலவே அங்கும் பாறை குறுக்கிட்டது. இதனால் பள்ளம் தோண்டும் பணியில் இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து பல்வேறு நிபுணர்கள் வரவழைத்து ஆலோசனை கேட்டு பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது.

இந்த நேரத்தில்தான் ஒரு பாடல் கேட்டது.. அது எங்கிருந்து வந்தது தெரியுமா.. போர்வெல் கிணற்றில் விழுந்து கிடந்த சிறுமி ஜெஸ்ஸிகாவிடமிருந்துதான். அதைக் கேட்டதும் அத்தனை பேருக்கும் பெரும் ஆச்சரியம்.. நிம்மதி.. அதை விட குழந்தை பயப்படாமல் தைரியமாக இருக்கிறாள் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து மீட்புப் பணிகள் வேகம் பிடித்தன. பள்ளம் தோண்டுவதில் இருந்த சிக்கல்களை தகர்த்து வேகமாக அதை செய்தனர்.

கிட்டத்தட்ட 45 மணி நேரம் ஆனது பள்ளத்தைத் தோண்டி பக்கவாட்டிலிருந்து கிடைமட்டமாக சுரங்கம் தோண்டு சிறுமி இருந்த இடத்தை அடைய. அதன் பின்னர் தீயணைப்பு படை வீரர் ஒருவர் உள்ளே இறங்கி மெதுவாக போய் குழந்தையை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தபோது ஒட்டுமொத்த அமெரிக்காவும் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தது.

இந்த மீட்புப் பணியின்போது பாறையை உடைக்க வாட்டர்ஜெட் கட்டிங் என்ற இயந்திரத்தைப் பயன்படுத்தினர். இது அப்போதுதான் அறிமுகமாகியிருந்த புதிய தொழில்நுட்பமாகும். ஆனால் இந்த மீட்புப் பணியில் அது முக்கியப் பங்கு வகித்தது. சரி இதில் பெரிய ஆச்சரியமில்லை.. இதற்கு மேல் நடந்ததுதான் நமக்கு முக்கியம்.. அதைப் படிக்கலாம்.

அமெரிக்க அரசு ஜெஸ்ஸிகா மீட்பைத் தொடர்ந்து அதிரடியாக ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. அது, நாட்டில் எங்குமே பயன்படுத்தப்படாத ஆழ் துளைக் கிணறுகள் பாதுகாப்பின்றி இருக்கக் கூடாது என்பதுதான் அது. உடனடியாக போர்க்கால அடிப்படையில், பயன்படுத்தப்படாத போர்வெல் கிணறுகள் மூடப்பட்டன. இரும்பு மூடி கொண்டு மூடப்பட்டன. மக்களே இதைச் செய்தனர். ஜெஸ்ஸிகாவிடமிருந்து கற்றுக் கொண்ட பாடத்தை அமெரிக்கர்கள் இன்று வரை உறுதியாக கடைப்பிடிக்கிறார்கள்.. விளைவு.. ஜெஸ்ஸிகாவுக்குப் பிறகு அங்கு யாருமே போர்வெல் கிணறுகளில் விழவில்லை.

ஆனால் நாம் தொடர்ந்து சுஜித்துகளை பறி கொடுத்துக் கொண்டேதான் உள்ளோம்.. நாம் என்று பாடம் கற்கப் போகிறோம்.

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here