இஸ்ரோவுக்கு பூடான், மொரீசியஸ் பிரதமர்கள் வாழ்த்து

0
116

சந்திரயான் 2 விண்கலம் விக்ரம் லேண்டரை நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கியது. நிலவில் விக்ரம் லேண்டர் தரை இறங்கியபோது அதிக வேகத்தில் இறங்கியதாகவும் லேண்டரில் இருந்து எந்தவித சிக்னலும் வரவில்லை எனவும், 2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த போது லேண்டரின் தகவல் துண்டிக்கப்பட்டதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்தார். இதையடுத்து பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் ஆறுதல் கூறும் வகையில் உரையாற்றினார். 

’சந்திரயான்- 2’ விண்கலத்தின் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் பலரும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வெளிநாட்டு தலைவர்களும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். பூடான் பிரதமர் லோட்டே ஷேரிங்  தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், “நாங்கள் இந்தியாவையும், இந்திய விஞ்ஞானிகளை நினைத்து பெருமை கொள்கிறோம். சந்திரயான்-2 கடைசி நிமிடத்தில் சவால்களை எதிர்கொண்டது. எனக்கு நரேந்திர மோடியை நன்கு தெரியும். மோடியும் அவரது இஸ்ரோ குழுவும் நிச்சயம்  எதிர்காலத்தில் வெற்றியை பெறுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல்,  மொரிசீயஸ் பிரதமர்  பிரவிந்த் ஜுக்னாவாத், இஸ்ரோ  விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இவர் கூறும்போது, “ இந்த முறை வெற்றிகரமாக நிலவில் தரையிறங்காவிட்டாலும், இந்திய விண்வெளி திட்டத்தில் மிகப்பெரிய தொழில்நுட்ப முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதை உலக நாடுகள் தற்போது எண்ணியிருக்கும். வரும் காலங்களில் இஸ்ரோ மற்றும் மொரிசீயசின் கூட்டு முயற்சியை நாங்கள் ஆவலோடு எதிர்நோக்கியிருக்கிறோம்.

நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை  தரையிறக்க முயற்சித்த இஸ்ரோவுக்கு நாங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.  அதேபோல், இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே தனது டுவிட்டரில் சந்திரயான் 2 திட்டத்திற்காக இஸ்ரோவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ராஜபக்சே டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- இஸ்ரோ விஞ்ஞானிகள், பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திட்டம் தோல்வி அல்ல ஆனால் இறுதி இலக்கை  அடைவதற்கான வெற்றிகரமான படியாகும். தெற்காசியாவில் உள்ள அனைவருக்கும் இது பெருமை மிக்க தருணம். விரைவில் நீங்கள் வெற்றியை அடைவீர்கள் என்று நாங்கள் நிச்சயமாக நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here