காஷ்மீர்: போராட்டக்காரர்கள் நடத்திய கல்வீச்சில் உள்ளூர் ஓட்டுநர் பலி

காஷ்மீரில் போராட்டக்காரர்கள் நடத்திய கல்வீச்சில் உள்ளூர் ஓட்டுநர் பலியானார்.

0
145
-Ads-

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து, அரசியலமைப்பில் 370 பிரிவை திரும்பப் பெற்றது. மாநிலத்தையும் இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்துள்ளது. அந்த மாநிலத்தில் எந்த அசம்பாவிதங்களும் நடக்காமல் தவிர்க்க கடந்த 5-ம் தேதியில் இருந்து பல்வேறு பாதுகாப்பு கெடுபிடிகளை அரசு விதித்துள்ளது.

காஷ்மீரில் இன்னும் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு தொடர்ந்து பலப்படுத்தப்பட்டு வருவதால், கட்டுபாடுகள் தொடர்ந்து வருகின்றன. முன்னாள் முதல்வர்கள் இன்னும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தொலைபேசி, செல்போன், தொலைக்காட்சி, இன்டர்நேட் சேவை இன்னும் கிடைக்கவில்லை.

கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி,  காஷ்மீரில் சில இடங்களில் அவ்வப்போது போராட்டங்கள் நடக்கின்றன. இந்த சூழலில், தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தில், ஸ்ரதிபோரா உரன்ஹால் என்ற இடத்தில், சிலர் திடீரென கல்வீச்சில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சென்ற டிரக்கை குறிவைத்து கல்வீசினர். 

பாதுகாப்பு படையினர் வாகனம் என நினைத்து கல்வீச்சில் ஈடுபட்ட  போராட்டக்காரர்கள் டிரக் மீது கல்வீசியதாக கூறப்படுகிறது. இந்த கல்வீச்சில் டிரக்கின் ஓட்டுநர் நூர் முகம்மது தார் (வயது 42) என்பவர் படுகாயம் அடைந்தார்.  அதே ஊரைச்சேர்ந்தவரான நூர் முகம்மது தார் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார். இதையடுத்து, உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், செல்லும் வழியில் உயிரிழந்தார். 

இதையடுத்து,  நடவடிக்கையில் இறங்கிய பாதுகாப்பு படையினர் கல் வீச்சில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து கொலை வழக்கு பதிவு செய்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் போராட்டக்காரர்கள் நடத்திய கல்வீச்சில் சிறுமி ஒருவர் படுகாயம் அடைந்தது நினைவிருக்கலாம். போராட்டக்காரர்கள், அப்பாவி பொதுமக்கள் மீது கல்வீசுவதாக போலீசார் குற்றம் சாட்டினர். 

-Ads-