ஓவர் நைட்டில் மாறிய அரசியல் தலைவர்கள்.. பேனர் தடை உத்தரவு நீடிக்குமா.. போன உசுரு திரும்பி வருமா!

0
275
-Ads-

சென்னை: ஹைகோர்ட் நேத்து போட்ட போடில்… ஓவர்நைட்டில் எல்லா அரசியல்வாதிகளும் நல்லவர்களாகி விட்டார்கள்.. எல்லா பேனர்களுக்கும் தடை உத்தரவு போட்டாயிற்று.. ஆனால் இது எத்தனை நாளைக்கு என்பதும், போன உசுருகள் திரும்ப வருமா என்பதும்தான் மில்லியன் டாலர் கேள்வி!

எளிமை அரசியல்.. இப்படி ஒன்று தமிழ்நாட்டில் இருப்பதாகவே தெரிவதில்லை. பேனர் வைப்பது என்பது அவரவர் அவங்கவங்க தலைமைக்கு காட்டுற விசுவாசமாகத்தான் பார்க்கப்படுகிறது.

பேனர், கட்அவுட்களின் மதிப்பை வைத்து, அந்த நபர் தன் பவரை ஊருக்குள்ளும், கட்சிக்குள்ளும் காட்டுகிறார். இதை மக்கள் விரும்புகிறார்களோ இல்லையோ, அல்லது சம்பந்தப்பட்ட கட்சி தலைமையே விரும்புகிறதோ இல்லையோ, பேனர் வெச்சாதான் கட்சியில் பொறுப்பு, மதிப்பு, சீட், இத்தியாதி.. இத்தியாதி.. என்ற எண்ணம் அழுத்தமாக பதியப்பட்டு உள்ளது.

இதற்கு விதிவிலக்கு என்றால் கம்யூனிஸ்ட் கட்சிகளையும், சமீபத்திய உதாரணம் என்றால் நாம் தமிழர் கட்சியினரையும் சொல்லலாம். எப்போதுமே எளிமை, எப்போதுமே கருத்து வலிமையை உடையவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியினர். எளிமையை எறிந்துவிட்டு இவர்களாலும் பகட்டுக்குள் நுழைய முடியும் என்றாலும் அதை இவர்கள் ஒருபோதும் விரும்பியது இல்லை. கவர்ச்சி அரசியலில் ஆர்வம் இல்லாதவர்கள் மட்டுமில்லை, அதில் துளியும் நம்பிக்கை இல்லாதவர்கள்தான் கம்யூனிஸ்ட்கள்.

நீண்ட காலத்துக்கு பிறகு நாம் தமிழர் கட்சி இதனை கையில் எடுத்துள்ளது. பிளக்ஸ், கட்அவுட்களில் பெருமளவு நம்பிக்கை இல்லை. அதனால்தான் இந்த கட்சி 3-வது அரசியல் கட்சி என்ற அந்தஸ்தில் இப்போது உள்ளது. கமல்ஹாசன் கட்சியை ஆரம்பிக்கும் ஒரு சில தினங்களுக்கு முன்புகூட ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அதில், “மதுரையில் பேனர்கள் வைக்க கூடாது, தனது உருவம் கொண்ட கட்-அவுட்கள் வைக்கவும் கூடாது, பேனர், கட்-அவுட் வைத்தால் அது பொது மக்களுக்கு இடையூறாக இருந்துவிடக்கூடாது. மக்கள் இவைகளை பார்த்து முகம் சுளித்துவிடக்கூடாது, நாம் மற்ற அரசியல் கட்சிகளில் இருந்து வேறுபட்டு தெரிய வேண்டும்”என்றே கூறியிருந்தார். இது எத்தனை பேருக்கு நினைவிருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் படோடாபத்துக்கு கமல் தன் கட்சியை உட்படுத்தி கொள்ளவில்லை என்பதே உண்மை.

தலைவர்கள் வருகைக்காக இப்படி பேனர்கள் வைப்பது என்பது ஒரு தவிர்க்க முடியாத நிகழ்வாகவே பார்க்கப்பட்டு வருகையில், இப்படி ஒருசில எளிமை அரசியல்வாதிகள் வெகு சீக்கிரம் மக்களால் சுண்டி இழுக்கப்படுகிறார்கள் என்பதற்கு சீமான், கமல், போன்றவர்களே சாட்சி. நேற்று ஒரே நாளில் எல்லா அரசியல் கட்சி தலைவர்களும் பேனர்களை வைக்க வேண்டாம் என்று தங்கள் கட்சியினருக்கு உத்தரவு போட்டுள்ளனர்.

டிராபிக் ராமசாமி தொண்டை தண்ணி வற்ற கத்தி கத்தி இதைதான் இவ்வளவு காலம் சொல்லி வந்த நிலையில், நீதிமன்றம் எத்தனையோ முறை பேனர் கலாச்சாரத்தை கண்டித்த நிலையில், மாநகராட்சி இதுகுறித்து பலமுறை எச்சரித்த நிலையில், இதே அரசியல் கட்சியினர் ஏன் இப்படி ஒரு உத்தரவை இதற்கு முன்பு கட்சியினருக்கு பிறப்பிக்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. அதேபோல நேற்று பிறப்பித்துள்ள உத்தரவும் எவ்வளவு நாள் கடைப்பிடிக்கப்படும் என்ற சந்தேகமும் பொதுமக்களிடம் எழுகிறது.

ஆனால் ஒன்று…. பேனர்கள் வைப்பதில் இல்லை உங்களின் கவுரவம்!

-Ads-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here