ஒவ்வொரு நாளுமே கொடுமையான நேரத்தைத் தான் கடக்கிறேன்: சாந்தனு உருக்கம்

0
286
-Ads-

ஒவ்வொரு நாளுமே கொடுமையான நேரத்தைத் தான் கடக்கிறேன் என்று சாந்தனு தனது ட்விட்டர் பதிவில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்

இயக்குநர் மற்றும் நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு. இன்று (ஆகஸ்ட் 24) தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இவருக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தனது அப்பா, அம்மா, மனைவியுடன் கொண்டாடிய பிறந்த நாள் புகைப்படங்களைப் பகிர்ந்து சாந்தனு “மின்னுவதெல்லாம் பொன்னல்ல. கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளுமே கொடுமையான நேரத்தைத் தான் கடக்கிறேன். நீண்ட காலமாக போராட்டம் மட்டுமே நான் வாழ்க்கையில் சந்தித்த ஒரே விஷயம்.

இந்த பிறந்தநாள் எனது பாதையை மாற்றி ஒரு நேர்மறையான திசைக்கு எடுத்துச் செல்லும் என்று உண்மையில் நம்புகிறேன். தொடர்ந்து என்னை ஆசிர்வதியுங்கள். பதிலுக்கு என்னால் கொடுக்க முடிவது எல்லாம் என் அன்பும் நன்றியுமே” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் சாந்தனு.

சாந்தனுவின் இந்த ட்வீட்டுக்கு பலரும், இந்தாண்டு சிறப்பான ஆண்டாக இருக்கும் என்று பலரும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். ஏன் இவ்வாறு ட்வீட் செய்திருக்கிறார் என்றால், மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சைக்கோ’ படத்தில் சாந்தனு தான் நடிப்பதாக இருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் அந்தப் படத்தில் இப்போது உதயநிதி ஸ்டாலின் நடித்துப் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது.

அதிலிருந்து மீண்டு, தற்போது ‘மதயானைக் கூட்டம்’ இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார் சாந்தனு. அந்தப் படம் கண்டிப்பாக தனக்குத் திருப்புமுனையாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

-Ads-